புதுச்சேரியில் வெப்பம் அதிகரிப்பு: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

07/04/2023

புதுச்சேரியில் வெப்பம் அதிகரிப்பு: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு

 972221

புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "2022-23-ம் கல்வியாண்டுக்கான 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வரும் 24 தொடங்கி 28-ம் தேதி வரை நடத்த கல்வித்துறை மூலம் திட்டமிடப்பட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், காவலர், எல்டிசி, யூடிசி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற இருப்பதாலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று முதல்வருடன் ஆலோசித்து, அவரது ஒப்புதலோடு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


அதன்படி வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது. ஆகவே இந்த தேர்வுக்கு ஒருநாள் முன்னதாகவே அது முடிவடையும். அவர்களுக்கான தேர்வு முடிந்த நாளில் இருந்து மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த தேர்வு அட்டவணை பொருந்தும். இன்றே எல்லா பள்ளிகளுக்கும் அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை செய்ய கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்படும்.


பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றித்தான் இந்த தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் நாம் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். கல்லூரிகளுக்கு மருத்துவத்துறைகளின் ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.


கரோனா தொற்று இருக்கிறது. ஆனால், அது அவசர நிலைக்கு வரவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சுகாதாரத் துறையின் அறிக்கை கேட்டுப் பெற்று அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


காவலர் தேர்வுக்கு உடற்தகுதி தேர்வு முடிந்துள்ளது. அவர்களுக்கு தேர்வு மையங்கள் இல்லாமல் எழுத்து தேர்வு நடத்த முடியாது. ஆகவே பள்ளி தேர்வுகள் முடிந்த பின்னர், அவர்களுக்கான விடுமுறை காலக்கட்டத்தில் காவலர் தேர்வு உள்ளிட்டவை நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு முடிக்கப்படும். கரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாகவே இத்தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுகிறது.


பூஸ்டர் தடுப்பூசிகளை அதிகளவில் போட வேண்டும். 4 வகையான கரோனா தடுப்பு மருந்துகள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தலாம் என்ற அறிவுறுத்தல்களை புதுச்சேரி அரசுக்கு, மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்த தகவல்களை முதல்வர் தெரிவிப்பார்.


100 சதவீத தேர்ச்சிக்காக தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அதுபோன்ற சூழல் வரும்போது சிறப்பு வகுப்புகளுக்கான அனுமதி கொடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால் இப்போது சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அனுமதி இல்லை" என்று அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459