சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 0.7 சதவீதம் உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

01/04/2023

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 0.7 சதவீதம் உயர்வு

 தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை, 0.7 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து நேற்று, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு காலாண்டுக்கும் திருத்தப்பட்டு வருகிறது.


நடப்பாண்டு, 2023 - 24ம் நிதி ஆண்டின், ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டுக்கு, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.


இதன்படி, தேசிய சேமிப்புச் சான்றிதழின் வட்டி விகிதம், 7 சதவீதத் திலிருந்து, 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெண் குழந்தைகளுக்கான, 'செல்வ மகள்' திட்டத்தின் வட்டி, 7.6 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி, 8 சதவீதத்தில் இருந்து, 8.2 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்ரா வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து, 7.6 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எனினும், கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதிர்வு காலம், 115 மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.


மேலும், தபால் நிலையங்களில் ஓராண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து, 6.8 ஆகவும்; இரண்டு ஆண்டுகளுக்கு, 6.8 சதவீதத்தில் இருந்து,-- 6.9 ஆகவும், மூன்று ஆண்டுகளுக்கு, 6.9 சதவீதத்தில் இருந்து,-- 7 ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்கு, 7 சதவீதத்தில் இருந்து, -7.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுஉள்ளது.


அதே சமயம், பொது வருங்கால வைப்பு நிதி, சேமிப்பு வைப்புத் தொகை ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459