எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் வெந்து தணியும் ஆசிரியர்கள்! - ஆசிரியர் மலர்

Latest

 




25/03/2023

எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் வெந்து தணியும் ஆசிரியர்கள்!

 உண்மையில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் மூச்சுகூட விட முடியவில்லை. படம் வரைதல், வெட்டுதல், ஒட்டுதல், வண்ணம் தீட்டுதல், பாடத் திட்டம் தயாரித்தல், செயற்படுத்துதல், செயலிவழி வாரந்தோறும் மதிப்பீடு செய்தல், இவற்றிற்கு தம் சொந்த பணத்தைச் செலவழித்தல் என ஓய்வின்றி எந்திரத்தனமாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உழல்வதைப் பார்க்க பாவமாக இருக்கிறது. அரும்பு, மொட்டு, மலர் நிலையிலுள்ள முதல் மூன்று வகுப்புகளில் உள்ள அறியாத பிஞ்சு குழந்தைகளைத் தயார் செய்வதில் முழு நேரமும் கவனமும் உழைப்பும் ஆசிரியர்கள் மத்தியில் உடல் சோர்வு, களைப்பு, மன உளைச்சல் ஆகியவற்றை தோற்றுவித்து வருவது எண்ணத்தக்கது.


உலகளாவிய, ஒன்றிய அரசுக்கு இணையான, நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு ஈடான பாடத்திட்டம் என்று குருவித் தலையில் பெரிய பலாப்பழத்தை வைத்தது போல அண்மைக்கால கல்வியின் நோக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் திணறிவருவதும் ஆசிரியர்கள் அதற்கு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்பதும் மலிந்து வருகிறது. பல்வேறு வளர்ந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் 'அளவான பாடத்திட்டம்; முழுமையான கற்றல்' என்பதை விடுத்து 'அளவுக்கதிகமான பாடத்திட்டம்; முழுமையடையாத கற்றல்' நிலைதான் இங்குள்ளது. 

சராசரி மற்றும் மெல்ல மலரும் குழந்தைகளுக்கு மூன்று பருவத்திற்கும் வடிவமைத்து வழங்கப்பட்டிருக்கும் எண்ணும் எழுத்தும் பாடத்திட்டங்கள், கற்றல் களங்கள், வகுப்பறை வேலைகள் போன்றவற்றை எந்தவொரு விடுப்பும் எடுக்காமல் 200 பள்ளி வேலைநாள்கள் முழுவதும் ஒழுங்காக வந்தால்கூட எதிர்பார்க்கப்படும் கற்றல் அடைவை அடையச் செய்தல் நடைமுறையில் இயலாத காரியமாகும். 
இந்த உலகத்தில் காணப்படும் நல்லவை அனைத்தும் தம் குழந்தைகளுக்கு ஒரேயடியாக கிடைத்துவிட வேண்டும் அல்லது திணித்து விட வேண்டும் என்கிற பேராசை பாடத்திட்ட தயாரிப்பு வல்லுநர் குழுவினருக்கு ஒருநாளும் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள 6-8 வயது குழந்தைகள் அனைவரும் ஒரு தாய் மக்கள் அல்லர். அக்குழந்தைகள் ஏற்ற, இறக்க, விளிம்பு நிலை சார்ந்த பலதரப்பட்ட குடும்பங்களின் அங்கத்தினர்கள் ஆவார்கள். இவர்களைக் கவனத்தில் கொண்டுதான் கடந்த காலங்களில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டன. ஏனெனில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வேறு வழியின்றித் தஞ்சம் புகும் பெருந்திரள் எண்ணிக்கையாக இவர்கள்தாம் உள்ளனர். 

நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்களுள் எத்தனை பேரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்? தூசியும் புழுதியும் படாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நல்ல தரமான பொன்சாய் செடியை வளர்ப்பது போல் இவர்களது பிள்ளைகளை ஒத்தவர்களாகவா இவர்களின் பள்ளிக் குழந்தைகள் இருக்கின்றனர்? யாரோ ஒரு சிலர் அல்லது ஒரு நுண் குழுவினர் நன்கு குளிரூட்டப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்ட அறையில் ஆளாளுக்கு மனத்தில் பட்டதை எல்லாவற்றையும் முறையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் அன்றாடம் அல்லாடும் குக்கிராமத்தில் இன்னமும் முதல் தலைமுறை பள்ளி செல்லும் பிஞ்சுக் குழந்தைகள் சுமக்க வேண்டும் என்று நினைப்பது கொஞ்சம்கூட சரியல்ல. உளவியல் கூற்றுப்படி இதுவும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கல்வி சார்ந்த வன்முறையாகவே நினைக்கத் தோன்றுகிறது. இந்த இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் ஆசிரியர்களின் துயரம் சொல்லவொணாதது ஆகும். 

இதுகுறித்து விரிவான, ஆக்கப்பூர்வமான, பயனுள்ள, மனம் திறந்த கலந்துரையாடல் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த உயர்அலுவலர்களிடையே நடந்ததாகத் தெரியவில்லை. கல்வி என்பது ஒரு வழிப்பாதை அல்ல. 
கல்வி சார்ந்த திட்டங்கள் எப்போதும் மேல்நோக்கி செயல்படுத்துவதாகவே உள்ளன. கால்களுக்கு ஏற்ற காலணிகள் உருவாக்குவதை விடுத்து காலணிகளுக்கேற்ப கால்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறோமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

மனசாட்சிபடி கூற வேண்டுமானால் வெற்று முழக்கக் கொண்டாட்ட மனநிலையில் கல்வியின் உண்மையான புதிய புதிய தரிசனங்களை வகுப்பறைகளில் காண எல்லோரும் தவறி வருகிறோம். பிஞ்சுக் குழந்தைகளைக் கட்டாமல்கட்டித் தரதரவென இழுத்துப் போவதால் எண்ணும் தெரியாமல் எழுத்தும் விளங்காமல் மெல்ல மலரும் மாணவர்களுள் பலர் ஒன்றும் தெரியாமல் தேங்கிப் போவதை என்னவென்று சொல்வது?

ஆசிரியர் பெருமக்களை ஏதோ குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பதுபோல புதுப்புது செயலி துணையுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கல்வி அலுவலர்கள் அச்சுறுத்துவதும் வீணான பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதும் நியாயம் தானா? எல்லையில் காவல் காக்கும் இராணுவ வீரர்களைப்போல எப்பொழுதும் அபாய நிலையில் ஆசிரியர்களை இருத்தி வைப்பது சமுதாய வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஒருநாளும் நன்மை பயக்காது. 

இத்தகைய சூழலில் எதிர்வரும் கல்வியாண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் ₹110 கோடி செலவில் 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக அண்மையில் வாசித்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் ஏற்கெனவே முதல் இரண்டு வகுப்புகளுக்கு இருந்த அறிவியல் கருத்துகளை உள்ளடக்கிய சூழ்நிலையியல் மற்றும் மூன்றாம் வகுப்பிற்குரிய சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வாய்ப்புகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதாக உள்ளது. 

இதனால் இளம் பருவத்திலேயே மாணவரிடம் போற்றி வளர்க்க வேண்டிய அறிவியல் மனப்பான்மை மற்றும் குடிமைப்பண்புகள் ஆகியவை சம வாய்ப்பு கிடைக்கப்பெறாமல் இருப்பது வேதனைக்குரியது. மேலும், ஆசிரியர்களுக்கு இதற்கு நேரம் போதவில்லை. இதற்குரிய ஆசிரியர்கள் உலைக் களத்தில் இருப்பது போன்று எந்நேரமும் அதைச் செய்து முடிக்க வேண்டும், இதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற பதற்ற மனநிலையில் காணப்படுவதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

இதுபோன்ற வெந்து தணியும் ஆசிரியர்கள் மத்தியில் வெற்று ஆடம்பர கொண்டாட்டங்கள் ஒருபோதும் சிறந்த தீர்வைத் தராது. எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனசை அறிவது அரசின் இன்றியமையாத கடமையாகும். அவர்களது குரலற்ற குரல்களில் அதள பாதாளத்தில் ஒலிக்கும் எண்ணும் எழுத்தும் மீதான கற்றல் கற்பித்தல் நியாயங்களை மனத்தில் இருத்தி வைத்துக்கொண்டு செயல்படுவது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.

எழுத்தாளர் மணி கணேசன்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459