தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




19/03/2023

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

 Tamil_News_large_3270251.jpg?w=360&dpr=3

தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.


சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என முதல்வர் அறிவித்தார்.


எனவே, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும் என்பதை அறிய, மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.


அவர்களை சமாதானப்படுத்த, முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.


கடந்த 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு.


நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இம்மாதம் 31ம் தேதி மாநிலத்தின் கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது எவ்வளவு கடன் உள்ளது என்ற விபரமும் நாளைய பட்ஜெட்டில் தெரியும்.


நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும். அதன்பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும்.


இக்கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459