மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்ற அறிவிப்பாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர், மருத்துவ படிப்பை கேரளாவில் முடித்தார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து, கொரோனா காலத்தின்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021ல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவர் பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்ற அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘தமிழ் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது அரசின் கொள்ைக முடிவு. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை’’ என வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மருத்துவர் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இந்த அப்பீல் மனுவின் இறுதி உத்தரவைப் பொறுத்தே அமையும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment