நவம்பர் 3 ல் தமிழகம் முழுவதும் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

16/10/2022

நவம்பர் 3 ல் தமிழகம் முழுவதும் போராட்டம் : ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

 

CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3ல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (16.10.2022) திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், STFI பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார்.

கூட்டப் பொருள்களின் மீதான மாநில நிர்வாகிகள் கூட்ட முடிவுகளை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பேசினார். கூட்ட முடிவில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ளவாறு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3ல் மாநிலம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலம் முழுதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459