மாணவர்களை பெற்றோர்கள் திட்டக்கூடாது: அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

07/09/2022

மாணவர்களை பெற்றோர்கள் திட்டக்கூடாது: அமைச்சர்

 சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்ற இந்த நீட் தேர்வை, நாடு முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களை திட்டுவதும், கடிந்து கொள்வதும் கூடாது என பெற்றோர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தையை இன்று ஆய்வு செய்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பெற்றோர்கள் அவர்களை திட்டவோ, கடிந்து கொள்ளவோ கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் யாருக்கேனும் மன அழுத்தம் இருக்குமானால், மாவட்டத்தில் உள்ள மனநல ஆலோசனை குழுக்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டார். அத்துடன் அதிகமான மாணவர்கள் எழுதியதால் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேறு வழியில்லாமல் தான் மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459