இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2022

இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இங்கு இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி),தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு,வேளாண் வணிக மேலாண்மை, இளம் தொழில்நுட்பம் பிரிவில் வேளாண் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய 12 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேற்கண்ட 12 பிரிவுகளுக்கும் உறுப்புக் கல்லூரிகளில் 2,148 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 2,337 இடங்களும் என மொத்தம் 4,485 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை சிறப்பு இட ஒதுக்கீடும் உள்ளது. அதன்படி, பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 971 மாணவர்களுக்கான இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும். அவர்களும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் https://tnau.ucanapply.com என்ற இணையதள பக்கத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இந்த பிரத்யேக இணையதளப் பக்கம் ஜூலை 27 நள்ளிரவு 11.59 வரை மட்டுமே இயங்கும். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு நிகழ்வு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரியில் சேர்வதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலமாக மட்டுமே நடக்கும். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரம் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு பயனுள்ளதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு 0422-6611322 / 6611328 / 6611345 / 6611346 ஆகிய தொலைபேசி எண்களை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459