கல்லூரி கனவு’ : முதல்வர் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

25/06/2022

கல்லூரி கனவு’ : முதல்வர் தொடக்கம்

சென்னை: பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றி பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும் மேற்படிப்பு முடித்ததும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கல்லூரி கனவு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்கள் தங்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும். உயர்கல்வித் துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், கல்லூரி கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்ட உள்ளன. இந்நிகழ்ச்சியில், ஹெச்சிஎல் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம், ஹெச்சிஎல் நிறுவனம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2,500 மாணவ, மாணவியரை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கும். பயிற்சிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். மாணவர்கள் பட்ட மேற்படிப்பை பயில வாய்ப்பும் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் கடிதம் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், எந்தெந்த தலைப்புகளில், எவ்வளவு நேரம் வல்லுநர்கள் பேச வேண்டும். நிகழ்விடம் குறித்து விளம்பரப்படுத்துதல், மாணவர்களை நிகழ்விடத்துக்கு அழைத்து வருதல், கையேடுகள் விநியோகித்தல் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு இந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த வேண்டும். மாணவர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்யும் துறை தொடர்பான விவரங்கள், அவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்று கடிதத்தில் இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459