2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

30/06/2022

2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

 சென்னை: அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. இருந்தும் நடப்பு கல்வியாண்டிலும் அரசு பள்ளிகளிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 9ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். ஆனால், 19 நாட்களாகிய நிலையில், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. 1 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆனால் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. எனவே குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என காத்திருந்த பெற்றோர், தனியார் பள்ளிகளில் சேர்த்து வருவதாக புகார் எழுந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சில பகுதிகளில் இது புகாராகவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக்கல்வி துறை உத்தரவில், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் உதவியுடன் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாத அரசுப் பள்ளிகளில், அங்கன்வாடி வகுப்பறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், நான்கு வயது நிரம்பிய குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459