தமிழ்நாட்டில் ஜூலை 18ல் கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - ASIRIYAR MALAR

Latest

Education News

27/06/2022

தமிழ்நாட்டில் ஜூலை 18ல் கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். மாவட்டங்கள் தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படும்.

கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாலிடெக்னிக்தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளோம். பொறியியல் கல்லூரியில் சேர தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேரலாம். 2% இட ஒதுக்கீட்டில் இந்தாண்டே தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மகளிர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459