'மாணவர்களை நீக்கிய காரணம் TC-யில் இனி இடம்பெறும்' - அமைச்சர் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

10/05/2022

'மாணவர்களை நீக்கிய காரணம் TC-யில் இனி இடம்பெறும்' - அமைச்சர் மகேஷ்

அநாகரிகமாக நடக்கும் மாணவர் 
''பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக நீக்கினால், எதற்காக நீக்கினோம் என்பதை டி.சி.,யில் எழுதி தருவோம்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். 



சட்டசபையில் நடந்த விவாதம்: 

பா.ம.க., - -ஜி.கே.மணி: 

மாணவர்கள் வகுப்பறையில் பாய் போட்டு படுத்தனர்; ஆசிரியர்களை தாக்கினர் என செய்திகள் வருகின்றன. பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். 

அமைச்சர் மகேஷ்: 

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி துவங்கும்போது, முதல் ஒரு வாரத்திற்கு மன நலம் பற்றிய பாடம் நடத்தப்படும். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன்பின்னரே பாடங்கள் நடத்தப்படும்.



ஆசிரியர்களை குறை கூறுவது தவறு. 

இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்களிடம் கவனச்சிதறல் உள்ளது. அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மாணவர்கள் மன அழுத்தத்திலும் உள்ளனர். மாணவர்களை நல்வழிபடுத்தும் பொறுப்பு, பெற்றோருக்கும் உள்ளது. அரசு, பெற்றோர், ஆசியர்களின் கூட்டு முயற்சியால், மாணவர்களை திருத்த வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் அநாகரிகமாக நடந்து கொண்டால் தற்காலிகமாக நீக்குவோம். நிரந்தரமாக நீக்கினால், எதற்காக நீக்கினோம் என, மாற்றுச் சான்றிதழான, டி.சி.,யில் எழுதி தருவோம். பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவது தடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459