திருப்பத்தூர் அரசு பள்ளிக்கு பூட்டு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/04/2022

திருப்பத்தூர் அரசு பள்ளிக்கு பூட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளியில் பாம்பு நுழைந்ததை கண்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளிக்கு பூட்டுப்போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் அனேரி ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 116 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் மேற்கூரை சிதிலமடைந்து அவ்வப்போது மேற்கூரை பலகை உடைந்து கீழே விழுவதால் மாணவர்கள் எந்நேரமும் பீதியுடன் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியின் மேற்கூரையில் பாம்பு ஒன்று நுழைந்ததைக் கண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், தீயணைப்புத்துறையினர் வனத்துறையினருக்கு தான் தகவல் கொடுக்க வேண்டும் எனக்கூறிய தால், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாம்பை பிடிக்க யாருமே வரவில்லை. அதற்குள்ளாக பள்ளி வேலை நேரம் முடிந்ததால் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதையடுத்து, நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, வகுப்பறையில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட மாணவர்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர். ஆசிரியர்களும் உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் 2 துறைகளைச் சேர்ந்தவர்களும் அங்கு வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளிக்கு பூட்டுப்போட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘ எங்கள் பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் இருந்து பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் அடிக்கடி நுழைகின்றன. கடந்த வாரம் சக்தி (44) என்பவர் வகுப்பறையை தூய்மை செய்யும் போது பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து, அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது வகுப்பறையில் பெரிய அளவிலான பாம்பு இருப்பதை கண்டோம். அதை பிடிக்கவும் யாரும் வராததால் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர். மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அரசுப்பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து, பள்ளி மேற்கூரையில் நுழைந்த பாம்பை பிடிக்க திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் பள்ளியின் மேற்கூரை மீது நீண்ட நேரம் தேடி பார்த்தும் பாம்பு சிக்கவில்லை. இதையடுத்து, பாம்பு நுழைந்த வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் தன்மை அறிந்து மேற்கூரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவாக செய்து கொடுப்பதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பினர். குடியிருப்பில் நுழைந்த பாம்பு திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள தோட்டத்தில், பாம்பு ஒன்று நேற்று மாலை நுழைந்தது. ஆட்சியர் குடியிருப்பு வளாக பராமரிப்பாளர்கள் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டனர். உடனே, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தோட்டத்தில் பதுங்கிய சுமார் 10 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து திருப்பத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment