பள்ளிகளுக்கு 13 நாள் கோடை விடுமுறை: அமைச்சர் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

18/04/2022

பள்ளிகளுக்கு 13 நாள் கோடை விடுமுறை: அமைச்சர் தகவல்

கொரோனா பாதிப்பால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 47அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் என்ற விருதுகளை வழங்கினார்.



அப்போது அவர் கூறியதாவது: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேடக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த விவரங்கள் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது. அதன்படிதான் பொதுத் தேர்வில் கேள்விகள் இடம் பெறும் என்று மீண்டும் தெரிவிக்கிறோம். தேர்வுக்கான பாடங்கள் நடத்தாமல் இருந்தால் அவற்றை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. எனவே முதல்வர் அது குறித்து முடிவெடுத்து அறிவிப்பார். தற்போது கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.



அதனால் இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர் சங்கங்களுடன் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளில் அரசாணை எண் 101, 108 ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

* கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

* தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

* இதன் காரணமாக, இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.

* அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459