கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

27/12/2021

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு, மறு நியமனம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அவர்களின் சேவை தேவையில்லை என்பதால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், மறு நியமனம் மறுத்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என அரசுத்தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் சஜீவ்குமார் வாதிட்டார். அதே சமயம், கல்வியாண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்குவது தொடர்பாக 2018-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என உயர் நீதிமன்றம், ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459