பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திலாவது, கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

30/11/2021

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திலாவது, கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை

அரசு மேல்நிலை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திலாவது, கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் என, 7,400 மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் வைத்து, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழியே தேர்வு செய்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.அவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நியமன பணிகள் ஜரூராக துவங்கியுள்ள நிலையில், கணினி அறிவியல் மாணவர்களும், பட்டதாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பல அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. பிளஸ் 2 வில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கணினி அறிவியல் பாட பிரிவில் படிக்கும் நிலையில், தற்காலிக நியமனத்தில் கூட, கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதிக்கவில்லை என, கணினி பட்டதாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங்கில் கணினி அறிவியல் பிரிவையே முதலில் தேர்வு செய்கின்றனர். கணினி அறிவியல் பிரிவுக்கே அதிக வேலைவாய்ப்பும் உள்ளது. எனவே, அந்த துறைக்கு முன்னுரிமை அளிக்காமல், தமிழக பள்ளிக்கல்வித் துறை அலட்சியம் காட்டுவதாக, தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை மேற்கொண்டு, பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாகவாவது, கணினி அறிவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, சங்கத்தின் பொதுச் செயலர் குமரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459