உயர் கல்வித்தகுதி ஊக்கத்தொகை: முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட ஆசிரியர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




03/11/2021

உயர் கல்வித்தகுதி ஊக்கத்தொகை: முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட ஆசிரியர்கள் கோரிக்கை

 உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு

ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:


மாநில அரசு ஊழியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 01.11.2021ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 10.03.2020க்கு முன்பு வழங்கப்பட்டது போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1969ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. எரிகின்ற மெழுகுவர்த்தி தான் மற்றொரு மெழுகுவர்த்தியை சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்க முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவாசான் அண்ணா அவர்களால் ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதில் பேரார்வம் காட்டி வந்தனர். அவ்வாறு ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்வி அவர்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமைந்தது.

இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகளாக வழங்கிவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் எவ்விதக் காரணமுமின்றி 10.03.2020 முதல் ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. இச்செயல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இச்செயல் அ.தி.மு.க ஆட்சியின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மிக முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்" என்று தெரிவித்தது. எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் அனைத்து நிலை ஆசிரியர்களும் இருந்தார்கள். அந்த நம்பிக்கையை வெடிவைத்துத் தகர்த்ததைப்போல உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்காமல் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அமைந்துவிட்டது.

50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது ஒருவரது பணிக்காலம் முழுவதும் பணப்பலனைத் தரக்கூடியது. ஓய்வுக்காலப் பலன்களுக்கும் பொருந்தக்கூடியது. அப்படிப்பட்ட பயனைப் பறித்துவிட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை என்பது உயர்கல்வி பயின்றவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்திற்குக் கூட ஈடாகாது என்பது தான் உண்மை.

மேலும், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை தனது ஊழியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான ஊக்கத் தொகை வழங்குவதில் மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, கல்விப்படி, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, மருத்துவப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தனது ஊழியர்களுக்கு வழங்காத தமிழக அரசு உயர் கல்வித்தகுதிக்கு மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்குவது என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

எனவே, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள உயர்கல்விக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசாணையை ரத்து செய்து விட்டு முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு,
(ச. மயில்)
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459