தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு..! - ஆசிரியர் மலர்

Latest

17/11/2021

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.


பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது. அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உயர்கல்வித்துறையானது முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா பாதிப்பானது குறைய தொடங்கியிருப்பதால் முழுமையாக நேரடி தேர்வு முறை நடத்தப்படும் என்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் இதே முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. நேரடி தேர்வானது அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கக்கூடிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459