ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட ஆராய்ச்சி (கேவிபிஒய்) தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இத்தேர்வு நடக்கிறது. 11ம் வகுப்பு முதல் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், முனைவர் படிப்பிற்கு செல்லும் வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ் வழியில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமாக படிக்கின்றனர். இவர்களால், இத்தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கேவிபிஒய் தேர்வை, அரசியலமைப்பு சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். தமிழகத்தில் தேர்வு மையங்களை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘அறிவியல்பூர்வ வார்த்தைகளை மொழி பெயர்த்து வழங்குவதில் பெரும் சிரமம் உள்ளது. இதற்கான பணியில் ஈடுபட போதுமான நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது. வரும் 7ம் தேதி இத்தேர்வு நடக்க உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து அதிக அறிவியல்பூர்வ கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அந்த நாடுகளில் தாய்மொழியிலேயே அனைத்தும் உள்ளன. ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியில் அதிக அறிவியல் வார்த்தைகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் பல மொழிகள் உள்ளன. குறிப்பிட்ட இரண்டு மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இந்திய கிராமப்புறங்களில் ஏராளமான மாணவர்கள் அதிக அறிவியல் திறனை கொண்டுள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி என்பதன் மூலம் மற்ற மொழி மாணவர்களை விலக்கி வைக்கும் நிலை உள்ளது. பல மொழிகளைக் கொண்ட ஒரு நாட்டில் இரு மொழிகளில் மட்டும் தான் தேர்வு என்பது பாகுபாடு காட்டுவதைப் போல உள்ளது. உதவித்தொகை குறைவாக இருந்தாலும், அது அங்கீகாரத்தையும், ஊக்கத்தையும் தரும். எதிர்காலத்தில் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க உதவும். எனவே நவ. 7ல் நடைபெறவுள்ள இத்தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறோம்.
ஒன்றிய அரசு, தேர்வு நடைமுறைகளை ஒத்திவைத்து அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணையில் இடம் பெற்றுள்ள மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனு தலைமை நீதிபதியின் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்’’’ என உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment