மகப்பேறு விடுப்பு - ஊழியர்களிடையே பாகுபாடு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/08/2021

மகப்பேறு விடுப்பு - ஊழியர்களிடையே பாகுபாடு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சென்னை: மகப்பேறு விடுப்பு வழங்கும் போது பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்ட கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதனை 2016 ஆம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்த சலுகைகளை அனைத்தும் முதல் 2 குழந்தைகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி உரிமை தாய் என அழைக்கப்படும் வாடகை தாய், மற்றும் குழந்தைகளை தத்தெடுப்போருக்கும் இந்த சலுகைகள் பொருந்தும். பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், சுரங்க பணியாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
மகப்பேறு கால விடுப்புக்கு விண்ணப்பிக்கும் மகளிர் 12 மாதங்களுக்கு முன்பு எந்த தேதியில் நிறுவனத்தின் சேர்ந்திருந்தாலும், மகப்பேறு கால விடுப்பு எடுக்க மகளிருக்கு உரிமை உண்டு. மகப்பேறு கால சலுகைகளை பெறுவதற்கு, வேலை செய்யும் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 80 வேலை நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 80 சேவை நாட்களாவது இருக்க வேண்டும். தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து 2016ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது.இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அவர் தனது மனுவில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பணிவரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், இதுதொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறைப்படுத்தப்பட்ட, வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது என அறிவுறுத்தி, ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பணியில் உள்ள அனைத்து தரப்பு பெண்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021-22ஆம் நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட்டில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இளம்தாய்மார்களுக்கு குழந்தைகளை உடன் இருந்து வளர்ப்பதற்கு ஓராண்டு கால விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..: ,

No comments:

Post a Comment