4 மாவட்ட கல்லூரி, பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/07/2021

4 மாவட்ட கல்லூரி, பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு

 

16267899152484

விழுப்புரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட 4 மாவட்டக் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


’’ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து சட்டப் பேரவையில் அதிமுக  ஆட்சிக்காலத்தில் அறிவித்து எவ்வளவு காலம் ஆகி உள்ளது? ஆனால் ஓராண்டுக்கும் மேலாக எந்தப் பணிகளும் இதுவரை நடக்கவில்லை. என்ன செய்கிறீர்கள் என்பது குறித்து விழுப்புரம் முன்னாள் அமைச்சரைக் கேட்க விரும்புகிறேன்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து அறிவிப்பு வெளியாகி, விழுப்புரம்  பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக வெறுமனே தொடங்கப்பட்டது. அதற்கென எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒரே ஒரு துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டார். பதிவாளர், பிற அதிகாரிகள் என யாருமே நியமிக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் எந்த செயல்பாடுகளும் நடத்தப்படவில்லை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் தெரியும்.


ஜெயலலிதா பல்கலைக்கழகம்

ஏற்கெனவே நம்முடைய நிதி நிலை எவ்வாறு உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் அண்ணாமலை பல்கலைகழகம் கூட்டு பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். ஏற்ககெனவே அண்ணாமலை பல்கலைக்கழகம் தனிப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டபோது, கூட்டு பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று அங்கிருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனிப் பல்கலைக்கழகமாகச் செயல்படுவதால், தன்னுடைய ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதனுடன் இவற்றை இணைப்பதன் மூலம் நிதிச்சுமையும் குறையும்.

எனவே அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கூட்டு பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். அவ்வாறு மாற்றி அதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டக் கல்லூரிகளும் இணைக்கப்படும்.

இதனால் பொருளாதார ரீதியாகவும் கல்வி வளர்ச்சி ரீதியாகவும் சிறப்பாக செயல்பட முடியும். வரலாற்று சிறப்பு வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருப்பதை ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் விரும்புவர்’’.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459