கரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி இயக்குநர் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

18/05/2021

கரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி இயக்குநர் தகவல்

 671874


கரோனா காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவது தொடர்பாகவே உரையாடல் நடந்தது என்று மத்திய அரசின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தெரிவித்தார்.

மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறைக்கு இ-மெயில் வந்தது. அதில், இப்போதைய கரோனா  காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதை எப்படிக் கையாளலாம், ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து, மே 17-ல் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்திய இக்கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் யாரும் பங்கேற்காத நிலையில், தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை தேர்தல் முடிந்து, முதல்வர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர்கள் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இச்சூழலில் இன்று நடந்த கூட்டத்தில் கல்வித்துறை வளாகத்தில் இருந்து கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு  மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். துறைச் செயலர் கரோனா பணியால் பங்கேற்கவில்லை.

கூட்டம் தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டதற்கு, "கரோனா காலத்தில் கல்வியைக் குழந்தைகளுக்கு வழங்குவதை எப்படிக் கையாளலாம் என்றே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் கல்வி வழங்கல், தேர்வுகள், தற்போது இது தொடர்பாக நடைமுறையில் உள்ள சூழல் தொடர்பாகப் பேசி யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

கரோனா காலச் சூழலில் கல்வி மேம்பாடு தொடர்பாகவே பேசினோம். கரோனா காலத்தில் ஆன்லைன் சேர்க்கை, ஆன்லைனில் தேர்வு, ஆன்லைன் கல்வி தொடர்பாக பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அதிக அளவில் விவாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459