969 சார்பு ஆய்வாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

25/05/2021

969 சார்பு ஆய்வாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு

 


தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பல வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர்கள் நேரடி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் 20 சதவீத பணியிடங்கள் காவல்துறை பணியில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்தத் தேர்வுக்கு 1.34 லட்சம் பேர் விண்ணபித்தனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் உடல் திறன் தேர்வுக்கும், ஒரு பணியிடத்துக்க 2 பேர் வீதம் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்பட்டனர்.

இந்த தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாகவும், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், இதனால் எழுத்துத் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான சலுகை வழங்கக்கோரியும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் முறைகேடு தொடர்பாகவும், ஒன்று முதல் பட்டபடிப்பு வரை தமிழில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் 969 சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் 15.4.2021-ல் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி ஏராளமானோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்ற தேர்வு மையத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட சிலர்களுக்கு நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நடைபெறும் கோடை விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459