தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம் - ஆசிரியர் மலர்

Latest

10/04/2021

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்

.


சென்னை: நீட் தேர்வை ஏற்கமுடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும். மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்தில் இதுவரை பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.கடந்த ஆண்டு பல மாணவர்கள் நீட் தேர்வு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் உயிரைக்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளன. இந்நிலையில், அனைத்து மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காணொலி வாயிலாக நீட் தேர்வு குறித்த கூட்டத்தை நடத்தினர்.அப்போது அந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, சாந்தி மலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சரிடம் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைக்கப்பட்டது. அதில் நீட் தேர்வை ஏற்கமுடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.அதேபோல் தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடரும். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459