அடிப்படை வசதியை உறுதிப்படுத்துங்கள் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

26/03/2021

அடிப்படை வசதியை உறுதிப்படுத்துங்கள் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 Sathyapratha_Sahoo


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் அலுவலக சங்க நிர்வாகிகள், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கொடுத்த மனு:தேர்தல் பணி மிகவும் முக்கியமான, தவிர்க்கக் கூடாத பணி. எனினும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற, நோய் பாதிப்பு உள்ளோருக்கு, மனிதாபிமான அடிப்படையில், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


ஒவ்வொரு தேர்தலிலும், அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற, 100 சதவீதம் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில், தேர்தல் வகுப்புகளை நடத்த வேண்டும். 


பெண் ஆசிரியர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்த வேண்டும்.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகளை, உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459