அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத நிலுவை ஊதியம், 14 மாத நிலுவை ஓய்வூதியம் தர அனுமதி. - ஆசிரியர் மலர்

Latest

17/03/2021

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத நிலுவை ஊதியம், 14 மாத நிலுவை ஓய்வூதியம் தர அனுமதி.

 Screenshot_2021_0317_134846


புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆறு மாத நிலுவை ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 14 மாத நிலுவை ஓய்வூதியமும் தர ரூ.27.85 கோடியை விடுவிக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 35 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 450 பேர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 350 பேர் உள்ளனர். மொத்தம் 800 குடும்பத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாகத் தரப்படவில்லை. இது தொடர்பான கோப்பு உயரதிகாரிகளால் பல முறை திருப்பி அனுப்பப்பட்டது. அப்போதைய ஆளுநர் கிரண்பேடியும் கோப்பினைத் திருப்பி அனுப்பினார். இதனால் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் அண்மையில் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை, அவர்களை அழைத்துப் பேசினார். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தரப்படும் நிதியுதவி பற்றி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து புதுச்சேரி பள்ளிக்கல்வி சட்டத்தையும் அதன் விதிகளையும் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.


ஊதியத்துக்காக கல்வித்துறை முன்பு ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்- கோப்புப் படம்

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் கடந்த 14 மாதங்களாகத் தரப்படவில்லை என்ற நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு விரைவில் தீர்வு காணவும், ஊதியம், ஓய்வூதியங்களைத் தரலாம் என்றும் ஆளுநர் அனுமதி தந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறப்பித்துள்ள உத்தரவில், "கடந்த ஜனவரி 2020 ஆண்டு முதல் பிப்ரவரி 2021 வரை 14 மாதங்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள 35 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியமும், கடந்த செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஆறு மாதங்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியமும் தரப்படும். இதற்காக ரூ. 27.85 கோடிக்கான பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் செலவிடத் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459