9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திறனறி போட்டிகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

15/02/2021

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திறனறி போட்டிகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

 633526


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆளுமைத் திறனைவளர்க்கும் வகையில் திறனறிப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள், பாடப் புத்தகங்களை தாண்டிதங்கள் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கவும் இது வழிவகை செய்யும்.


அதன்படி அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல் ஆகிய திறனறிப் போட்டிகள், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளன. கரோனாபரவலால் அனைத்து போட்டிகளும் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும். அதற்குத் தேவையான இணையதள வசதிகளை பள்ளிகள் தயார் செய்துகொள்ள வேண்டும்.

அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறந்த 4 மாணவர்களைத் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்பு விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்.19-ம்தேதி நடத்தப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தேர்வான சிறந்த 5 மாணவர்கள் பிப்.25-ல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு செல்போன், டேப்லெட், கால்குலேட்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுடன், சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. எனவே, கரோனா பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடம் தராதபடி போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459