அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு குட் நியூஸ்! - ஆசிரியர் மலர்

Latest

01/11/2020

அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு குட் நியூஸ்!

 


அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயின்று, கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

 

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2017-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வர உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 7.5% இட ஒதுக்கீட்டு சட்டமும் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஓரிரு நாட்களில் மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட உள்ளது. 

 

2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில், பயிற்சி பெற்று, கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் உள்ள மாணவர்கள், விரைவில் அறிவிக்கப்பட உள்ள மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

 

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 747 பேரின் விவரங்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பி உள்ளது. 

 

பட்டியலில் உள்ள மாணவர்களைத் தொடர்பு கொண்டு, எதிர் வரும் மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 

 

நடப்பு ஆண்டில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் மூலம் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.-News7

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459