வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கான தேர்வு - நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி - ஆசிரியர் மலர்

Latest

17/11/2020

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கான தேர்வு - நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

 




வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் தொழில்புரிவதற்கான தேர்வு (FMGE) வினாத்தாளை மதிப்பீடு செய்ய சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக தொழில்புரிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வு (FMGE) எழுத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் இத்தேர்வில், 300க்கு 150 மதிப்பெண் எடுத்தவர்களை மட்டுமே FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிக்கும். அவ்வாறு வெளியிடப்படும் முடிவுகளில் மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவை கிடையாது என்றும், கேள்வித்தாள் அல்லது திருத்தப்பட்ட விடைத்தாள் தேர்வர்களுக்குக்கு தரப்படாது எனவும் விதிகள் உள்ளன. 

 

கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டபோது, 17,198 தேர்வர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 1,999 மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 

குறைந்த அளவிலான தேர்ச்சிக்கு எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பாடத்திட்டம் அளவில் கேள்விகளை கேட்காமல், மேற்படிப்பு அளவில் கேள்வி கேட்கப்பட்டதாகக் கூறி, இத்தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அமைக்க கோரி, சீனா, ரஷ்யாவில் மருத்துவம் படித்து இத்தேர்வில் தோல்வியடைந்த பெரியண்ணன், பவித்ரா உள்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 

அந்த மனுவில், கேள்வித்தாளில் இந்தி மொழியில் லோகோக்களுடன் கேள்விகள் இடம்பெற்றிருந்ததால், இந்தி தெரியாதோருக்கு அவற்றை புரிதலில் சிரமம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தனர். 

 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பாடத்த்திட்டத்தில் தான் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டதாகவும், ஏற்கனவே 20 பேர் கொண்ட குழு வினாத்தாளை ஆய்வுசெய்துள்ளதாகவும், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு முறையாக நடந்துள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

 

அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுவழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த விவகாரங்களில் நிபுணர் குழு எடுக்கும் முடிவுகளில் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை ஏற்கனவே 20 நிபுணர்கள் கொண்டு குழு 4 நாட்களாக ஆய்வு செய்ததாகவும், எந்த தவறும் நடக்கவில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாலும், நிபுணர் குழுவை அமைக்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

மேலும், வெளிநாடுகளில் படித்து இந்தியாவில் மருத்துவ தொழில்புரிய அனுமதி வழங்குவதை பொறுத்தவரை, அவர்களின் தகுதியை தீர்மானிக்க, அதிகபட்ச தரத்தை உறுதிசெய்யும் வகையிலேயே இந்த தேர்வு நடத்தப்படுவதாகவும், மனுதாரர்கள் கோரிக்கையில் நிவாரணம் வழங்க முடியாது என்பதால், மனுதாரர்கள், தங்களை முழுமையாக தயார்படுத்தி அடுத்த ஆண்டு தேர்வை எதிர்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459