மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க கோரிக்கை

 


கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே முழுமையாக ஏற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மாநில உரிமையைப் பறித்து கடந்த 2017 முதல் மருத்துவப் படிப்புக்காக அகில இந்திய அளவில் நீட் எனும் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வால் தமிழகத்தின் கிராமப்புற, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது. இதுவரை இத்தேர்வால் 18 மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டின் படி, எம்பிபிஎஸ் 313, பிடிஎஸ்-92, 405 சீட் வரை கிடைத்துள்ளது. இவர்களில் பல மாணவர்களுக்குத் தனியார் கல்லூரியில் தற்போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் ஒதுக்கப்பட்டால் பல லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

போராடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றும் கட்டணம் கட்ட முடியாமல் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் அடித்தட்டு குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பது அறிந்ததே.

ஆகவே, அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அத்தனை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமெனவும், வரும் காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியிலேயே இடம் ஒதுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்

மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆனால், இப்பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் பட்சத்தில் அரசுக் கல்லூரிகளின் கட்டணமே இக்கல்லூரியிலும் தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது”.

இவ்வாறு தெரிவித்தார்

No comments:

Post a comment