புதிதாக அரசுப் பணி வழங்கும் போது ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் - ஆசிரியர் மலர்

Latest

16/11/2020

புதிதாக அரசுப் பணி வழங்கும் போது ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்


 புதிதாக அரசுப் பணி வழங்கும் போது ஒப்பந்த மற்றும் தற்காலிக பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தமாகா தலைவர் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கை:புதிதாக அரசுப் பணி வழங்கும் போது ஒப்பந்த மற்றும் தற்காலிக பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியும், அதோடு ஏற்கனவே ஆசிரியர்களின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள்கால சான்றிதழாகவும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

அரசுப் பல்கலைகழகங்கள்; மற்றும் கல்லூரிகளில், பேராசிரியர்களும், கவுரவ விரிவுரையாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலும், பல நேரங்களில் தற்காலிகமாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அரசின் நிரந்தர வேலை கிடைக்கும் என்ற கனவுகளுடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்..

அரசு கல்லூரிகளில் புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் போது, ஏற்கனவே தற்காலிக பேராசிரியர்களாகவும், கவுரவ விரிவுரையாளர்களாகவும் பணியாற்றும் தகுதி வாய்ந்த, அனுபவம் உள்ளவர்களாக திகழும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவர்கள் கற்பிக்கும் திறனில் எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லை.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கு நிரந்த பணி ஆணை வழங்கினால், அவர்களுடைய உழைப்பும், எதிர்பார்ப்பும் வீணாகும். பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் இவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், அவர்களின் திறமையை பாராட்டி இருப்பது மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

பள்ளி கல்வி ஆசிரியர்களை பொருத்தமட்டில் அவர்களின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களின் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள்கால சான்றிதழாக திகழும் என்று சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு வரவேற்கதக்கது. ஆனால் இதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் தகுதிச் சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்குத் தான் செல்லுபடி ஆகும்.

அவர்களின் தகுதி சான்றிதழ் ஆயுள்கால சான்றிதழாக மாற்றம் செய்ய, தமிழக அரசு ஆலோசனை செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. ஆனால் எந்தவிதமான உத்திரவாதமும் அளிக்கவில்லை.

ஆகவே தமிழக அரசு, புதிதாக பணி வழங்கும் போது கல்லூரி, ஒப்பந்த மற்றும் தற்காலிக பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியும், பள்ளி கல்வி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஏற்கனவே அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கான தகுதி சான்றிதழை ஆயுள்கால சான்றிதழாகவும் வழங்கும் படியும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459