தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு நெருக்கடி கொடுக்க கூடாது - ராமதாஸ் - ஆசிரியர் மலர்

Latest

14/11/2020

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு நெருக்கடி கொடுக்க கூடாது - ராமதாஸ்

 


சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிய கல்வி கொள்கையை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்திருக்கிறது. புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், அதை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், இல்லாவிட்டால் மானியத்தை நிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதும் மாநில சுயாட்சிக்கு சவால் விடுக்கும் செயல்களாகும். தமிழக அரசால் தொடங்கப்பட்டு, அதன் ஆளுகையில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு தெரியாமல் ஆதிக்கம் செலுத்த பல்கலைக்கழக மானியக்குழு முனைவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த செயலை தமிழக அரசு தடுக்க வேண்டும்.புதிய கல்வி கொள்கை குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் மதிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு எந்த வகையிலும் பல்கலைக்கழக மானியக்குழு நெருக்கடி கொடுக்கக்கூடாது. அச்சுறுத்தக்கூடாது. இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459