மாணவர்களின் பிறப்பிட சான்றிதழ் குறித்து ஆய்யு மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு - தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

20/11/2020

மாணவர்களின் பிறப்பிட சான்றிதழ் குறித்து ஆய்யு மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு - தமிழக அரசு

 


மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பிறப்பிட சான்றிதழ் குறித்து, உரிய ஆய்யு மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. முறைகேடு நிரூபணமானால் இக்குழுவே நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

 

தமிழகத்தில் இளநிலை மருத்து படிப்புக்கான கலந்தாய்விற்காக வெளியிடப்பட்ட தர வரிசைப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களின் பெயரும் இடம்பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய பட்டியலில், கேரளா, தெலங்கானா மாநில தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள சில மாணவர்களின் பதிவு எண்களும் இருந்தன. இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், பிறப்பிட சான்றிதழ் முறைகேட்டுக்கு துணைபோன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

 

இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பிறப்பிட சான்றிதழ் குறித்து ஆய்வு செய்யவும், இதுதொடர்பான பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதற்காகவும் 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

 

இக்குழுவில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் பராசக்தி, மருத்துவக் கல்வி துணை இயக்குனர் இந்துமதி, மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜ், மருத்துவர்கள் ராஜசேகர் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களின் விபரங்களையும், சான்றிதழை சரிபார்ப்பதுடன், பிறப்பிட சான்றிதழ் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை சிறப்புக் குழு மேற்கொள்ளும்.மருத்துவக் கலந்தாய்வில் ஒரு மாணவரின் பெயர் வெவ்வேறு மாநில தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தவறு அல்ல என்று மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், கலந்தாய்வில் பங்கேற்கும் மாநிலத்தில் வேறு மாநில பிறப்பிட சான்றிதழை சமர்ப்பித்து, சமூக பிரிவில் சீட் பெறுவதே குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வின் முதல் நாளில் 262 பேர் பங்கேற்றனர். இதையடுத்து, இரண்டாவது நாளிலும் மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459