முதுகலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் :தமிழக அரசு பதில் - ஆசிரியர் மலர்

Latest

22/11/2020

முதுகலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் :தமிழக அரசு பதில்


 முதுகலை மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்க
உத்தரவிடக்கோரி அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும்
பிறப்பிக்கக் கூடாதென மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வக்கீல் விஜய் நாராயண், இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு நவம்பர் 7-ந்தேதி அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இந்த
நிலையில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை
உறுதிசெய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 டாக்டர்கள் சார்பில்
மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனுக்கள் கடந்த 19-ந்தேதிக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு உள்ளிட்டவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள், ரிட் மனுக்கள்
தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதன் வக்கீல் யோகேஷ் கண்ணா சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
முதுகலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்குமானது, குறிப்பிட்ட பிரிவினருக்கானது இல்லை. இந்த
விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்ததாகும். கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வு
அடிப்படையில்தான் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது சேவைமனப்பான்மையுடன் பணிபுரியும் அரசு
மருத்துவர்களுக்கான முன்னுரிமையே தவிர இடஒதுக்கீடு இல்லை. அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடங்களை வழங்குவது என்ற தமிழக
அரசின் கொள்கை முடிவு சரியானதே. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி இந்த 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு
ஒதுக்கப்படுகின்றன.
எனவே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டு
உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459