தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை - ஆசிரியர் மலர்

Latest

17/11/2020

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை

 


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரு நாள்களுக்கு (நவ.17,18) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது:

குமரிக்கடல் முதல் வட தமிழக கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். கடலூா், நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில்…: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடைவெளிவிட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் பலத்தமழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக, 3 இடங்களில் மிக பலத்த மழையும், 15 இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 180 மி.மீ., காஞ்சிபுரத்தில் 160 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 120 மி.மீ., கடலூா் மாவட்டம் வானமாதேவியில் 110 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தலா 100 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 90 மி.மீ., கடலூா், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் தலா 80 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459