அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு : மாணவர்களின் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

31/10/2020

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு : மாணவர்களின் கவனத்திற்கு

 



கோப்புப்படம்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முன்பு அதன் கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசால் ஏற்று நடத்தப்படும் சில மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களில் மாறுபாடுகள் இருப்பதால், அதுதொடா்பான குழப்பங்களைத் தவிா்க்க இத்தகைய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. அந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு  www.mcc.nic.in என்ற இணைய முகவரியில் கடந்த 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளைத் தோ்வு செய்து வருகின்றனா்.

இந்த கலந்தாய்வை நடத்தும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் கட்டண விவரங்களை முழுமையாக அறிந்த பிறகே கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டணம் மாறுபடும். உதாரணமாக, தமிழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்தி வந்தாலும், அந்த கல்லூரியில் பிற அரசு கல்லூரிகளைவிட அதிக கட்டணமாகும். அதனால், அந்த விவரங்களைத் தெரிந்து கொண்டு கல்லூரியைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459