குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

27/10/2020

குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.


 குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர், மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற சூழலில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்ப உறுப்பினர் இல்லாத நிலையில் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சிசிஎல்) எடுக்கலாம்.


இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


''பிரதமர் மோடியின் தலைமையிலான அரசில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, இனி மேல் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (சைல்ட் கேர் லீவ் - சிசிஎல்) எடுக்கலாம்.


ஆனால், விடுப்பு எடுக்கும் அந்த ஊழியர் மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ அல்லது திருமணம் ஆகாதவராகவோ இருக்க வேண்டும். அதாவது தந்தை மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தாலும் சிசிஎல் எடுக்கலாம்.


இந்த முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டாலும், அதிகமான ஈர்ப்பை மக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள் மத்தியில் பெறவில்லை. சிசிஎல் விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு குறித்தும் பணியாற்றும் துறையின் தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.


குழந்தையைக் கவனித்துக்கொள்ள அரசு ஊழியருக்கு முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், 2-வது ஆண்டில் 80 சதவீத ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும், சிசிஎல் விடுப்பில் ஒரு ஊழியர் இருக்கும்போது எல்டிசி விடுப்பு பெற முடியும்.


அதிலும் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்தால், அந்தக் குழந்தைக்கு 22 ஆண்டுகள் வரை எந்த வயதில் அந்தக் குழந்தை இருக்கும்போதும் தேவைப்படும்போதும் விடுப்பு எடுக்கலாம்.


பிரதமர் மோடியின் தனிப்பட்ட அக்கறை, தலையீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், மாற்றங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த முடிவு என்பது ஒரு அரசு ஊழியர் தன்னுடைய அதிகபட்ச, முழுத்திறனையும் வெளிப்படுத்தி பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. அதேசமயம், அரசு ஊழியர்கள் பணியாற்றாமல் இருத்தல், கையூட்டு போன்ற குற்றங்களில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது''.


இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459