Just Now : திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

04/09/2020

Just Now : திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.





நீட் தேர்வை மறுசீராய்வு செய்யக்கோரி தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, செப்டம்பர் 13ம் தேதி நடக்க முடிவு செய்திருந்த நீட் தேர்வை நடத்தக்கூடாது என தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்தனர். ஏற்கனவே, கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நீட், ஜே.இ.இ. ஆகிய தேர்வுகளை போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கண்டிப்பாக நடத்த வேண்டும் என கூறி எதிராக தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் ஆகஸ்ட் 17ம் தேதி தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து இதற்கு எதிராக ஆங்காங்கே அனைத்து கட்சியினரும் போராட்டத்தை நடத்தினர். இதனிடையே தமிழகம், புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்கள் சார்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது  கொரோனா பேரிடருக்கிடையில் தேர்வுகளை நடத்துவதில் மாணவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை உச்சநீதிமன்றம் உணர வேண்டும். இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்படும்.

 தொடர்ந்து, மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மாநிலங்கள் தாக்கல் செய்த மறுசீராய்வு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் திட்டமிட்டபடி, நீட் தேர்வானது செப்டம்பர் 13ல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459