விடைத்தாள் மோசடி : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை - ஆசிரியர் மலர்

Latest

06/09/2020

விடைத்தாள் மோசடி : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த விடைத்தாள் மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக கவர்னர் மற்றும் உயர்கல்வித்துறை செயலருக்கு துணைவேந்தர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து நிறைய மாணவர்கள் படித்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த வருடம் முதல் வெளிமாநிலங்களில் தொலைநிலைக்கல்வி மாணவர் சேர்க்கை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்தது. பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்புக்கு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் தொலைநிலைக் கல்வி மாணவ,மாணவிகளுக் கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஏற்கனவே தொலைநிலைக்கல்வியில் சேர்க்கை பெற்ற வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள சில கல்வி மையங்களில் இருந்து தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இது குறித்து, விரிவான விசாரணை நடத்த ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைத்து துணைவேந்தர் கிருஷ்ணன் உத்தரவிட்டார். அந்த குழுவினர் விடைத்தாள் முறைகேட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், ஆனால், முழுமையாக கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், அந்த குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைக்கலாம் என துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த பரிந்துரையின் படி, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தமிழக கவர்னர் மற்றும் உயர்கல்வித்துறை செயலருக்கு துணைவேந்தர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459