ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு தொடங்கியது - ஆசிரியர் மலர்

Latest

02/09/2020

ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு தொடங்கியது

சென்னை,
நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு நடத்தப்படும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர், செப்டம்பர் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேர் எழுதும் ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 34 மையங்களில் 53 ஆயிரத்து 765 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் நகர்ப்பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. புறநகரில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதினார்கள். முதல் நாளான நேற்று பி.ஆர்க். படிப்புக்கு தேர்வு நடந்தது. இன்று (புதன்கிழமை) பி.டெக். படிப்புக்கான தேர்வு நடைபெற உள்ளது.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் வருகிற 6-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்களில் முதல் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர், அடுத்தகட்டமாக ஜே.இ.இ. மேம்பட்ட (அட்வான்ஸ்டு) தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அந்த தேர்வு வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459