ஸ்டேட் வங்கியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு கடன் தவணைகளுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

22/09/2020

ஸ்டேட் வங்கியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு கடன் தவணைகளுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
வங்கி கடனை செலுத்துவதற்கு அவகாசம் கேட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வங்கிகள் கெடுபிடியாக கடன்களை வசூலிக்க கூடாது என்றும், தவணைகளை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆனால் அதையும் மீறி ஒரு சில வங்கிகள் பொது மக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை எடுத்ததோடு, தவணையை செலுத்தக்கோரி எஸ்.எம்.எஸ் மூலம் தகவலும் அனுப்பியது.
இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கி தவணைகளை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த கால அவகாசம் இந்த மாதம் நிறைவடைகிறது.
இதற்கிடையில் ஸ்டேட் வங்கி மேலும் 2 ஆண்டுகளுக்கு வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் கொடுத்துள்ளது. வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த மறு தவணை அட்டவணை தயாரித்து வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கான வசதியை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் வேலை இழந்து வருவாய் இழந்துள்ளனர். அதனால் இந்த சிறப்பு திட்டத்தை ஆர்.பி.ஐ. அறிவுறுத்தலின் பேரில் ஸ்டேட் வங்கி செயல்படுத்துகிறது.
இதுகுறித்து ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குனர் சி.எஸ்.ஷெட்டி கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களின் வருவாய் குறைந்து வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளது. சிறுகடனுதவி பெற்று தொழில் செய்யக்கூடியவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முடியாத நிலை உள்ளது.
அதனால் மேலும் 2 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459