செப்டம்பர் 27-ல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

26/09/2020

செப்டம்பர் 27-ல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஊழியர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 6.35 லட்சம் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் செப்.11-ம் தேதி வெளியாகின. ஜேஇஇ மெயின் தாள் 1 மற்றும் தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு  தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க முடியும்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், காலை மதியம் என இரண்டு வேளைகளிலும் தாள் 1 மற்றும் தாள் 2-க்கு என இரண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. கணினியில் நடைபெறும் இரண்டு தேர்வுகளையும் மாணவர்கள் எழுத வேண்டியது கட்டாயமாகும்.
தேர்வு நடைபெறுவதை அடுத்து, ஊழியர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி,
''* தொற்று தடுப்புக்கான காய்ச்சல் கண்டறிதல், சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* ஒவ்வொரு தேர்வறையிலும் தனிமனித இடைவெளியுடன், ஒரு இருக்கை விட்டு மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
* தேர்வறைக்குள் செல்வதற்கு முன்னதாக எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறையும் தேர்வு உபகரணங்கள் பயன்பாட்டுக்கு முன்னும் பின்னும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
* முகக்கவசம், கையுறை ஆகியவற்றை மாணவர்கள் அணிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
* தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.
* தேர்வறையில் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுத் தேர்வை டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459