நீட் எழுத 25 நிமிடங்கள் மட்டுமே கொடுத்தனர் - தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பிய மாணவி - ஆசிரியர் மலர்

Latest

14/09/2020

நீட் எழுத 25 நிமிடங்கள் மட்டுமே கொடுத்தனர் - தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பிய மாணவி



சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு, 25 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தனது மருத்துவ கனவு பாழானதாக பாதிக்கப்பட்ட மாணவி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தேசிய தேர்வு முகமைக்கு ஆன்லைன் வழியாக புகார் செய்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிவேதா கடந்த 2019 ஆம் ஆண்டு +2 முடித்தார். அதே ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாததால் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி எடுத்து தேர்வுக்கு தயாராகி வந்தார். இவரது தந்தை பாஸ்கர் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் சேத்துப்பட்டிலுள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு தன் தந்தை மற்றும் சித்தப்பாவுடன் தேர்வு மையத்திற்கு நிவேதா வந்தார். மற்ற மாணவர்கள் போல இவருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதிகாரிகள் அவரது ஆடையை பரிசோதனை செய்த போது பீப் ஒலி கேட்டதால் அவர் அந்த இடத்திலேயே கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட தெர்மல் பரிசோதனையின் போதும் பீப் ஒலி கேட்டதால் அவர் தனியே நிற்க வைக்கப்பட்டார். இதனால் 2 மணிக்கு தேர்வெழுத வேண்டிய நிவேதா 4.22 மணிக்கு தான் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டார். இதனால் 3 மணி நேரம் எழுத வேண்டிய தேர்வை, வெறும் 25 நிமிடத்தில் எழுதிக்கொடுத்து விட்டு வேதனையுடன் வெளியே வந்தார் நிவேதா.
இது குறித்து மாணவி நிவேதா கூறும் போது “உடலின் வெப்பநிலை சீராகத்தான் இருந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தனியே நிற்க வைக்கப்பட்டிருந்தேன். கடந்த ஓராண்டில் நீட் தேர்விற்காக நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆன்லைனில் இதுவரை நடத்தப்பட்ட பயிற்சி தேர்வுகள் ஒவ்வொன்றிலும் 690 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். இதர வழக்கமான நடைமுறைகள் நடந்து மிகச்சரியாக 25 நிமிடங்கள் மட்டுமே தேர்வெழுத முடிந்தது” என்று கூறினார்.

இது குறித்து மாணவியின் சித்தப்பா கூறும் போது “தேர்வு முடிந்தபின் நிவேதா எங்களிடம் தகவலை கூறினார். உடனே நானும் நிவேதாவின் தந்தையும் தேர்வு மைய தலைமை அதிகாரியிடம் பேசினோம். அதற்கு அவர் வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு சொல்வதாக கூறினார். ஆனால் அதன் பின்னர் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.
ஓராண்டு உழைப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகிவிட்டதாக கூறும் நிவேதாவின் குடும்பம் அவரை மறுதேர்வு எழுத வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மாணவி தேசிய தேர்வு முகமைக்கு ஆன்லைன் வழியாக புகார் செய்துள்ளார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459