அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சத்தை தாண்டியது - ஆசிரியர் மலர்

Latest

03/09/2020

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 53 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 1 கோடியே 10 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் போது சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுதி வெளியேறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சராசரியாக 10 லட்சம் பேர் புதியதாக சேர்வதுண்டு. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று அரசு உத்தரவிட்டதின் பேரில் தற்போது பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் 10 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் சேர்ந்துள்ளனர். நேற்றைய கணக்கின்படி 11 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
குறிப்பாக, முதல் வகுப்பில் நேற்று வரை 2 லட்சத்து 65 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்க்கை 4 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. அதேபோல பிளஸ்1 வகுப்பில் நேற்று வரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இதில் முதல் வகுப்புசேர்க்கை என்பதுதான் புதியது. பிளஸ் 1 வகுப்பை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். புதிய சேர்க்கை எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை.  தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் 6ம் வகுப்பில் நேற்று வரை 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். 9ம் வகுப்பில் 90 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர 7, 8, மற்றும் 10ம் வகுப்பில் புதியதாக சேர்ந்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை இன்னும் தெரியவரவில்லை. தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவ மாணவியரில் பெரும்பாலான மாணவ மாணவியர் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் போதிய வருவாய் இன்றி, தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
மேலும் தனியார் பள்ளிகளில் இருந்து வேறு பல காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட மாணவர்களும் தற்போது அரசுப் பள்ளிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இது தவிர அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பெற்றோரிடம் பேசி மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இந்த வகையில் , தற்போது அனைத்து வகுப்புகளிலும் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்கள் என்று பார்த்தால் 1 முதல் 2 % பேர் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பள்ளிகள் திறப்பது இன்னும் முடிவாகாத நிலையில் மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அவகாசம் இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த காலத்துக்குள் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவே காரணம்
பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுய தொழில் மற்றும் தனியார் நிறுவனகளில் வேலை பார்க்கின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளிக் கட்டணம் கட்ட முடியவில்லை. இதனால் பலர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து நிறுத்தி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459