E-PASS : படையெடுக்கும் பொதுமக்கள்: தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது.! - ஆசிரியர் மலர்

Latest

17/08/2020

E-PASS : படையெடுக்கும் பொதுமக்கள்: தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது.!



தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும்தான் இ-பாஸ் நடைமுறை கொண்டு  வரப்பட்டது. குறிப்பாக, திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இதன் மூலம் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கண்காணிக்கவே இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக அரசு தெரிவித்தது. ஆனால், பொதுமக்கள் அவசர  காரணங்களுக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் சில புரோக்கர்கள் புகுந்து இ-பாஸ் வாங்கித் தருவதாகவும், அவர்களுடன் அதிகாரிகள் கைகோர்த்து பணம் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள்  எழுந்தன. அதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஏஜென்ட்டுகள் மூலம் விண்ணப்பிக்கும்போது மட்டும் இ-பாஸ் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு  தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க இன்று முதல் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14-ம் தேதி அறிவித்தார். 

இதன்படி, இன்று முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும்  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 5 மாதமாக இருந்த இ-பாஸ் கெடுபிடி, இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதே வேலையில், இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டதால், சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  பொங்கல், தீபாவளி பண்டிகையை முடித்து சென்னை மக்கள்  திரும்புவது போல், சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பரனூர் சுங்கச்சாவடியில் வாகனம் அதிகளவில் காணப்படுகிறது. 

இ-பாஸ்  

இன்று முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் போது, ஆதார் அல்லது குடும்ப அட்டை விபரங்களுடன் தொலைபேசி அல்லது செல்போன் எண் இணைக்க வேண்டும். தற்போது இ-பாஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் எந்த தாமதமும்  இல்லாமல் உடனே தரும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த உடனே தானாக அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இ-பாஸ்  கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459