முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

01/08/2020

முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு


சென்னை, ஆக.1-
முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி பொறுப்பாளர்கள் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கினால் பொதுமக்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும், அதேநேரம், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள் ஊதியம் வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்து இடைக்கால உத்தரவு ஒன்றை கடந்த மாதம் 17-ந்தேதி பிறப்பித்தார்.
அதில், “கடந்த 2019–20 கல்வி ஆண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக்கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து பள்ளிக்கூடங்கள் வசூலித்துக் கொள்ளலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை இன்னும் இறுதி செய்யப்படாததால், கடந்த கல்வி ஆண்டில் வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020–2021ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீத தொகையை (ஆகஸ்டு) 31-ந்தேதிக்குள் வசூலித்து கொள்ளலாம். மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளலாம்” என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், கல்விக்கட்டணத்தை முன்கூட்டியே வசூலிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு மனுதாரருக்கு பொருந்தும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்தார்.
அப்போது, தமிழக கல்வித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் வி.அன்னலட்சுமி, “இந்த ஐகோர்ட் 40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டும், அந்த உத்தரவை மீறி நடப்புக்கல்வி ஆண்டுக்கான மொத்த கட்டணத்தையும் கட்டாயப்படுத்தி பல தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்கள் வசூலித்து வருகிறது” என்று புகார் செய்தார்.
இதை கேட்ட நீதிபதி, முழு கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளிக்கூடங்கள் மீது வந்துள்ள இந்த குற்றச்சாட்டை இந்த கோர்ட் தீவிரமாக கருதுகிறது. பல பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் செய்ய தயங்கியுள்ளனர். குரல் வழியாக வந்த புகாரின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவை மீறி முழு கல்விக்கட்டணத்தையும் வசூலித்த தனியார் பள்ளிக்கூடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த பள்ளிக்கூடங்களின் விவரங்களையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். உத்தரவை மீறி முழுக்கட்டணம் வசூலித்தது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்களின் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த தயக்கமும் இல்லை. விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459