நீட் தேர்வு மையங்கள் வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/08/2020

நீட் தேர்வு மையங்கள் வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு


வெளிநாடுகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய மனு மீது உத்தரவு எதனையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. புது தில்லி: வெளிநாடுகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய மனு மீது உத்தரவு எதனையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
கரோனா தொற்று சூழலின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் பங்கேற்க வசதியாக நீட் தேர்வு மையங்களை வெளிநாடுகளில் அமைக்க கோரியும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அந்த மனுவில் நீட் மற்றும் ஜெ.இ.இ. ஆகிய இரு தேர்வுகளுக்கு இடையிலான குறுகிய கால இடைவெளியும் மாணவர்களை பாதிக்கும் முக்கிய காரணியாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் அடங்கிய அமர்வின் முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரடியாக மத்திய அரசுக்கோ அல்லது தேசியத் தேர்வு முகமைக்கோ உத்தரவு எதனையும் பிறப்பிக்க மறுத்து விட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு சார்பாக சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் வாய்மொழியாக கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்கியது.
மனு செய்துள்ள இத்தகைய மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ விமானங்களில் பயணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசிக்குமாறும், அவ்வாறு வரும் மாணவர்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடர்புடைய மாநில அரசுகளிடம் ஆலோசிக்குமாறும் தெரிவித்தது. அதேசமயம் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மனுதாரர்களிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் என்று துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459