அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் - பஞ்சாப் அரசு - ஆசிரியர் மலர்

Latest

29/07/2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் - பஞ்சாப் அரசு

சண்டிகர்: பஞ்சாபில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால், பல பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வியை கையில் எடுத்துள்ளன. அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து சில மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதனால், 11 மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‛அரசுப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனமா?
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இதற்காக நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான ‛லாவா’ உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. முதல்கட்டமாக 50,000 ஸ்மார்ட்போன்கள் தயாரான நிலையில் அவற்றை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்திய – சீன எல்லைப் பிரச்னையால் சீனப் பொருட்கள் மீதான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பஞ்சாப் அரசு ஒப்பந்தம் போட்டுள்ள ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கு சீனாவுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்று கேள்வி எழுந்தது. இதுபற்றி உடனே ஆய்வு செய்து பதிலளிக்குமாறு அமரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். இதில் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாக அறிக்கை மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் முதலில் அவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459