தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் தொடர்பான பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

17/07/2020

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் தொடர்பான பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்


தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் டிபிஐ வளாகத்தில் செயல்படுகிறது.
இந்நிலையில், கல்விக் கட்டணம் நிர்ணயித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த சுமார் 6000 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அமலுக்கு வர உள்ளதாக தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தியுள்ளது. வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக 6000 பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் பள்ளிகள் இதுவரை வசூலித்த கல்வி கட்டண விவரம், தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டிய கல்வி கட்டணம் மற்றும் எதிர்பார்க்கும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்னர் பள்ளி நிர்வாகிகளை நேரில் அழைத்து, அவர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான புதிய கல்வி கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யும். வரும் கல்வியாண்டில் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக இந்த புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
ஒவ்வொரு முறையும் கல்வி கட்டண மறுசீரமைப்பின்போது, ஏற்கெனவே உள்ள கட்டணத்தைவிட குறைந்தபட்சம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மிகப்பெரிய பள்ளிகளுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. 
எனவே, இந்த முறையும் குறைந்தபட்சம் 15 சதவீதம் கல்விக் கட்டணம் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459