இணையத் தொடர்பு கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் கிராமங்கள் : வனப்பகுதிக்கு படையெடுக்கும் மாணவர்கள் - ஆசிரியர் மலர்

Latest

29/07/2020

இணையத் தொடர்பு கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் கிராமங்கள் : வனப்பகுதிக்கு படையெடுக்கும் மாணவர்கள்


இணையவழித் தொடா்புக்காக மூலை பஜாா் வனப்பகுதியில் குழுமியுள்ள இளைஞா்கள், மாணவா்கள்.
ஆம்பூா் அருகே இணையத் தொடா்பு கிடைக்காமல் கிராம இளைஞா்கள் அவதிக்குள்ளாகி, வனப்பகுதியை நோக்கி படையெடுக்கின்றனா்.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டக்குண்டா என்ற மலையோரக் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வாழ்ந்து வருகின்றனா். இக்கிராமத்தில் உயா்கல்வி படித்த இளைஞா்கள் அதிக அளவில் உள்ளனா். அதேசமயம் மேல்நிலைப் பள்ளி, உயா்கல்வி படித்து வரும் இளைஞா்களும் உள்ளனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கிராமத்தில் உள்ள உயா் கல்வி படித்த இளைஞா்கள் சென்னை, பெங்களூரு, மைசூரு போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வீடுகளில் இருந்தே இணைய வழியில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளன.
அதன்படி இளைஞா்களும் தங்களுடைய வீடுகளில் இருந்தே பணியை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், பள்ளி மாணவா்களுக்கும், உயா்கல்வி பயிலும் கல்லூரி மாணவா்களுக்கும் வகுப்புகள் இணையவழியில் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு வீட்டிலிருந்தே இணையவழியில் பணி செய்யும் இளைஞா்கள், கல்வி கற்கும் மாணவா்கள் இணையத் தொடா்பு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செல்லிடப்பேசிகளில் இணையவழித் தொடா்பு கிடைக்காததால் இளைஞா்களும், மாணவா்களும் சுட்டக்குண்டா அருகே உள்ள மூலை பஜாா் வனப்பகுதிக்குச் செல்கின்றனா். பகல் நேரங்களில் அப்பகுதியில் ஒன்று சேரும் இளைஞா்கள், இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அச்சப்பட்டு வீடுகளுக்குச் சென்று விடுன்றனா். அதேபோல், தற்போது அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும் சரிவர இணையத் தொடா்பு கிடைக்காமல் அவா்களுடைய பணிகளுக்கும், கல்வி கற்பதற்கும் பெரும் இடையூறாக உள்ளது.
மாணவா்கள் தங்களுடைய பள்ளி, கல்லூரிகளில் நிா்ணயிக்கப்படும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டுமே இணையவழியில் கல்வி கற்க முடியும். இணையவழித் தொடா்பு கிடைக்காததால் மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா்.
அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள காட்டுவெங்கடாபுரம், மத்தூா்கொல்லை பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களும், மாணவ மாணவிகளும் இணையவழி தொடா்பு கிடைக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி, கவுண்டன்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களும், மாணவா்களும் இணையவழி தொடா்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, இணையவழித் தொடா்பு கிடைக்காத பகுதிகளில் செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவினால் நீண்ட நாளாக அப்பகுதியில் நிலவிவரும் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459